Sourashtra Time
NOW AVAILABLE IN READY STOCK. RUSH YOUR ORDER FOR hiinun caLisye, hitavun caLisye and cunuk caLisye for Rs. 250/- ONLY.
Advertisement
binthulA kheni - review

சூர்யா ஞானேஸ்வரின் “பிந்து3லா கெ2நி -- மது3ரெ ஸர்கு3”

(சிலப்பதிகாரம் - மதுரைக் காண்டம்) -- சௌராஷ்ட்ரி மொழிபெயர்ப்பு நூல் 

வெளியீடு: ஸெளராஷ்ட்ரீ ஸாஹித்ய பிரசுரம்
94/1, 7வது தெரு மேற்கு விசாலம்,
கிருஷ்ணாபுரம் காலனி, மதுரை-625014.
தொலைப்பேசி: 8098840447
விலை ரூ.200/-
 

மதிப்புரை:  முனைவர் .ரா. கோவர்தனன்

 

உலக மானுட இனங்களின் வாழ்வியல் முறைகள், நெறிகள், சிந்தனைகள், நம்பிக்கைகள், அரசியல் சித்தாந்தங்கள், இலக்கிய வளங்கள், கலாச்சாரம் பண்பாடு சார்ந்த விழுமியங்கள், அனைத்தையும் அவை பதிவு செய்யப்பட்ட மூலமொழியிலிருந்து இலக்கு மொழிக்குக் கொண்டு சேர்ப்பதில் மொழிபெயர்ப்பு நூல்கள் பெரும் பங்காற்றி வந்திருக்கின்றன. இத்தகைய மகத்தான பணியை ஆற்றும் விதத்தில், தமிழில் ஐம்பெருங்காப்பியங்களில் ஒன்றான இளங்கோவடிகள் இயற்றிய சிலப்பதிகாரத்தின் "மதுரைக் காண்டம்" இன்று சௌராஷ்ட்ரி மொழியில் "பிந்து3லா கெ2நி -- மது3ரெ ஸர்கு3" எனும் மொழிபெயர்ப்பு நூலாக மதுரை உலகத் தமிழ்ச் சங்கத்தில் அரங்கேறுகிறது. தமிழகத்தில் மொழிவாரிச் சிறுபான்மைச் சமூகத்தைச் சார்ந்த சூர்யா ஞானேஸ்வரின் இரண்டாவது சௌராஷ்ட்ரி மொழிபெயர்ப்பு நூலாக "மது3ரெ ஸர்கு3" வெளியாகிறது. (முதல் மொழிபெயர்ப்பு நூலான "பிந்து3லா கெ2நி - புகார் ஸர்கு3" சென்ற ஆண்டு வெளியிடப்பட்டது.)

 

இந்நூலாசிரியர் தன் தாய்மொழியான சௌராஷ்ட்ரியைத் தவிர தமிழ், ஆங்கிலம், கன்னடம், ஹிந்தி எனப் பன்மொழிப் புலமை பெற்றவர். தன் பட்டப்படிப்பில் இளங்கலை தமிழ் இலக்கிய மாணவராக சிலப்பதிகாரக் காப்பியத்தின் மீது கொண்டிருந்த  அளவிலாக் காதலாலும், தன் தாய்மொழி சௌராஷ்ட்ரியின் மீது கொண்டுள்ள அதீத பற்றினாலும், இக்காப்பியத்தைத் தன் தாய்மொழியில் மொழிபெயர்க்கும் நீண்டகால விருப்பத்தை தற்போது வெற்றிகரமாக நிறைவேற்றியிருக்கிறார். அவருக்கு நமது நெஞ்சார்ந்த வாழ்த்துகள்.

 

கி.பி. 11ம் நூற்றாண்டில் குஜராத்தின் "சௌராஷ்ட்ரம்" மாநிலத்திலிருந்து புலம்பெயர்ந்து வந்தது முதல் சௌராஷ்ட்ரி மொழி பெருமளவில் இச்சமூகத்தின் பேச்சு மொழியாகவே தொடர்ந்து வந்துள்ளது. இருப்பினும், 16ம் நூற்றாண்டிலேயே பல்வேறு சௌராஷ்ட்ர கவிஞர்களின்  படைப்பிலக்கியங்கள் சௌராஷ்ட்ரி மொழியில் தோன்றியிருக்கின்றன. பகவத்கீதை, திருக்குறள், என உலகின் செவ்விலக்கியங்கள் முழுவதும் கவிதை நடையிலேயே சௌராஷ்ட்ரியில் மொழிபெயர்க்கப்பட்டு சௌராஷ்ட்ரி இலக்கிய உலகில் முத்திரை பதித்துள்ளன. இந்த வரிசையில் சூர்யா ஞானேஸ்வரின் "பிந்து3லா கெ2நி - மது3ரெ ஸர்கு3" முதன்முதலாக உரைநடைச் சௌராஷ்ட்ரியில் வெளியாகும் தமிழ் இலக்கியம் எனும் பெருமையைப் பெறுகிறது.

 

ஒரு மூல நூல் தன் வாசகர்கள் மீது எத்தகைய தாக்கத்தை ஏற்படுத்துகிறதோ அத்தகைய தாக்கத்தை இலக்கு மொழியில் ஏற்படுத்தும் மொழிபெயர்ப்பே சிறந்த மொழிபெயர்ப்பாகக் கருதப்படுகிறது. நெஞ்சையள்ளும் சிலப்பதிகாரத்தின் கவியழகை "மது3ரெ ஸர்கு3"வின் உரைநடை இழந்து நின்றாலும், மூலநூலின் காவிய அழகை சொல்லோவியமாக ஆசிரியர் தன் தாய்மொழியில் திறம்படக் கொணர்ந்திருக்கிறார் என்றே கூற வேண்டும். கதைமாந்தர்கள், அவர்கள் சார்ந்த குலம் மற்றும் களம், ஒவ்வொரு குலத்திற்குமுரிய தெய்வவழிபாடு, கள்ளுண்ணல் மற்றும் பலிகொடுத்தல் போன்ற சமூகப் பழக்க வழக்கங்கள், ஆடல் பாடல் போன்ற கேளிக்கைகள், வீரவிளையாட்டான ஜல்லிக்கட்டு, இயற்கை எழில், அறவோரின் அறவுரைகள், கர்மவினைப் பலன்களில் நம்பிக்கைகள், தமை ஆளும் மன்னர்களின் வீரம் மற்றும் நீதிவழுவாத செங்கோலாட்சியின் மாண்பு, பத்தினிப் பெண்களைத் தெய்வங்களாகப் போற்றுதல், என சிலப்பதிகாரம் உள்ளடக்கியிருக்கும் அத்தனை சங்க கால வாழ்வு மற்றும் நெறிமுறைகளை சரளமான இலக்கிய நடையில் அற்புதமான சொல்வளத்துடன் நூலாசிரியர் மொழி பெயர்த்திருக்கிறார். சௌராஷ்ட்ர  இலக்கிய முன்னோர்களின் படைப்புகளில் மட்டுமே காணமுடிகின்ற பல்வேறு மூலச் சொற்களை அவற்றின் மருவிய வடிவங்களைச் சுட்டிக்காட்டும் விதத்தில் பரவலாகக் கையாண்டிருக்கிறார். "தெகர்ப2ல்லொ, லுக்கிலிகின், மொவ்தி, கவ்னொ, த3கரபாயிர், ஜ2க3ட், களய்லத்தக், கெங்கு3டு3ம், கெனுகி,  பொ4ட்ணம், தோண்டு3ர், கெல்லேட்" முதலிய மூலச்சொற் பிரயோகங்கள் மொழிபெயர்ப்பின் இலக்கியச் சுவையைக் கூட்டுகின்றன.

 

பல நூற்றாண்டுகளாக பேச்சு மொழியாகவே தொடர்ந்து, எழுத்து மொழியின் தொடர்பு ஏறக்குறைய அறவே அறுந்து விட்ட இன்றைய சௌராஷ்ட்ரி மொழிக்கு வளமும் வலுவும் சேர்க்கும் விதத்தில் பல்வேறு இலக்கியச் சொற்களைத் தேடிக் கண்டுபிடித்து நூலாசிரியர் பயன்படுத்தியிருக்கிறார். தூய தமிழ்ச் சொற்களான செங்கோல், தென்றல், பொய்கை, ஐவகை நிலங்களான குறிஞ்சி, முல்லை, மருதம், நெய்தல், பாலை, மலர் மலர்தலின் ஐவகை நிலைகள், கள், கொம்பு, பலிபீடம், மான்வாகனம், மயக்கம், போற்றுதல், இம்மை, மறுமை, சுருட்டை, ஒட்டியாணம், சந்தேகம், பிரிதல், காம நோய் -- போன்ற தமிழ்ச் சொற்களுக்கு இணையான எண்ணற்ற சௌராஷ்ட்ரி சொற்களை மொழிபெயர்ப்பாளர் நினைவூட்டியிருக்கிறார். சௌராஷ்ட்ரி மொழியார்வலர்கள் இந்நூலை ஒரு சௌராஷ்ட்ரி சொற்களஞ்சியம் என்றே கொள்ளலாம்.

 

தூய இலக்கியச் சொற்களைக் கையாண்டிருக்கும் அதே வேளையில் ஆங்காங்கே பேச்சு மொழிச் சொற்களையும் இழையாடி மொழிபெயர்ப்புக்கு இனிமை சேர்த்திருக்கிறார் ஆசிரியர். "லபக்கெர்லியவெ கா3யின்” (ஆநிரை கவர்தல்) , லொளைலி (அலைந்து), லோள்பொடி (அலைந்து திரிந்து)" போன்ற சாமானிய பேச்சு வழக்குகளுடன், "ம:ட்ட, ஹிந்தெ3ஸ், ஸேஸே, பனி க4ல்லினி, ஸோகு3பனி" போன்ற வட்டார வழக்குகளையும் இணத்துள்ளதன் மூலம் தமிழ்நாட்டின் பல்வேறு மாவட்டங்களில் வாழும் சௌராஷ்ட்ரர்களிடையே எங்கும் நிலவும் மொழிரீதியான நெருக்கத்தை உணர்த்தியிருக்கிறார்.

 

மொழிபெயர்ப்பு நூலின் இறுதியில் மதுரைக் காண்டத்தின் 13 காதைகளுக்கும் சௌராஷ்ட்ரி சொல்லகராதி இணைக்கப்பட்டுள்ளது.  அருஞ்சொற்களுக்கு இணையான தமிழ்ச் சொற்களைக் காட்டியிருப்பது ஆசிரியர் தனது மொழிபெயர்ப்பை வாசிப்பவர்கள் முழுவதுமாகப் புரிந்து ருசிக்க வேண்டும் என்று விரும்புவதை நமக்குப் புரிய வைக்கிறது. அது போலவே, மதுரையில் கண்ணகி மாதரியிடம் அடைக்கலம் இருந்த (இன்று சிதிலமாகியிருக்கும்) இல்லம், கோவலன் கொலையுண்ட இடம் (இன்று ஓர் இடுகாடு) இவற்றைப் பற்றியெல்லாம் படங்களுடன் விளக்கியிருப்பது, மொழிபெயர்ப்பாளரின் பணிக்கு மேலாக ஒரு ஆய்வறிஞரின் முனைப்புடன் ஆசிரியர் மேற்கொண்ட பெரும் முயற்சிகளைத் தெளிவுபடுத்துகிறது.

 

இப்படிப் பல்வேறு சிறப்புகளைக் கொண்டிருப்பினும், சூர்யா ஞானேஸ்வரின் "பிந்து3லா கெ2நி - மது3ரெ ஸர்கு3" மொழிபெயர்ப்புக் கொள்கைகளுக்கும் மரபுகளுக்கும் பொருந்தாத சில அம்சங்களையும் கொண்டுள்ளது. வாசகர்களுக்கு தான் எழுதும் எதையும் எளிதாகப் புரிய வைக்க வேண்டும் எனும் நோக்கத்துடன் ஆர்வ மிகுதியில் ஆசிரியர் உரையின் இடையிலேயே ஆங்காங்கே கருத்துகளுக்கு விரிவான விளக்கம் அளித்து விடுகிறார். ஐவகை நிலங்கள், மலர்தலின் ஐவகை நிலைகள், இசைக்கருவிகளின் வகைகள், அப்பம், கொழுக்கட்டை, போன்ற உணவுப்பொருள்கள், என ஒவ்வொன்றும் வருணனைகளின் ஊடே விரிவான விளக்கம் பெறுகின்றன. ஓரிடத்தில் ஆசிரியர் தனது தனிப்பட்ட ஆதங்கத்தை சமூக ஆதங்கமாக விரிவாக்கி ஒரு உவமையாக இளங்கோவடிகளின் வரிகளில் இணைத்து விடுகிறார். "புறஞ்சேரியிருத்த காதை" யில்

"கொடுங்கோல் வேந்தன் குடிகள் போலக் கதிர்படும் அமையம் பார்த்து இருந்தோர்க்கு" என்றொரு உவமை வருகிறது. அதாவது, "கொடுங்கோல் மன்னவனுடைய வீழ்ச்சியை எதிர்பார்த்திருக்கும் அவன் குடிமக்கள் போன்று, வெஞ்சுடர் ஞாயிறு மறைந்து குளிர்நிலா தோன்றும் அந்தி மாலைப் பொழுதினை கோவலன், கண்ணகி, கௌந்தியடிகள் மூவரும் எதிர்பார்த்திருந்தனர்" என்பது பொருள். இளங்கோவடிகளின் இந்த உவமையோடு மொழிபெயர்ப்பாளர் சௌராஷ்ட்ரி லிபி ஆர்வலராக தனது உவமை ஒன்றினையும் இணைத்துக் கொள்கிறார்: "ஸௌராஷ்ட்ரி மொழிக்குத் தனக்கென ஓர் எழுத்து (லிபி) இருக்க, அதை வளர விடாது பிறிதொரு எழுத்தினைப் புகுத்தி அழிக்க நினைக்கும் கூட்டம் ஒழிந்து, மக்கள் ஒற்றுமையாக தங்கள் சுயஎழுத்தைப் பயன்படுத்தும் நன்னாளை சௌராஷ்ட்ரி மொழிப்பற்றாளர்கள் எதிர்பார்த்திருப்பது போல", என்பதையும் இணைத்து உவமைப்படுத்துகிறார். மொழிபெயர்ப்பின் அடிப்படைக் கொள்கைகளில் ஒன்று, மூலநூலில் இருக்கும் எதையும் மொழிபெயர்ப்பில் விட்டு விடக் கூடாது, புதிய கருத்து எதையும் சேர்த்து விடக் கூடாது, உள்ளதை உள்ளபடி பொருள் மாறாமல் இலக்கு மொழியில் கொண்டு சேர்க்க வேண்டும்  என்பது. உரையின் இடையே விளக்கங்களைச் செருகுதலையும் தனிப்பட்ட கருத்துகளைப் புகுத்துவதையும் தவிர்த்தால் மொழிபெயர்ப்பின் தரம் மேலும் உயரும்.

 

நிறைவாகக் கூறின், தமிழ்ச் சான்றோர் தவிர பிற தமிழரே எளிதில் பொருள் விளங்கிப் படிக்க இயலாத ஒரு சங்ககாலத் தமிழ் இலக்கியத்தை ஒரு சிறுபான்மையின மக்களின் மொழியில், உரைநடையில் திறம்பட மொழிபெயர்த்திருக்கும் சூர்யா ஞானேஸ்வரின் இலக்கியச் சாதனை போற்றுதற்குரியது. "பிற நாட்டு நல்லறிஞர் சாத்திரங்கள் தமிழ் மொழியிற் பெயர்த்தல் வேண்டும்" என்று பாரதி சொன்னதை தன் தாய்மொழிக்கும் சொன்னதாகக் கருதி, தமிழ்நாட்டின் பெருங்காப்பியங்களில் ஒன்றை அதன் சுவைகள் குன்றாமல் சௌந்தர சௌராஷ்ட்ரி மொழியில் பெயர்த்திருக்கிறார் நூலாசிரியர். இந்த மாபெரும் இலக்கியப் பணி மூலம், சிலப்பதிகாரக் காப்பியம் காட்டும் பல்வேறு விழுமியங்கள் நிறைந்த தமிழர் வாழ்வியலை தன் தாய்மொழியில் அழகாகச் சித்தரித்துக் காட்டியிருப்பதுடன் சௌராட்டிரர்களின் எழுத்து மொழிக்கு வளமும் புத்தொளியும் அளித்திருக்கிறார். சூர்யா ஞானேஸ்வரின் மொழி-இலக்கியப் பணிகள் மேன்மேலும் தொடர ஆர்வலர்கள் அனைவரும் நெஞ்சார வாழ்த்துவோம்.

User Comments
Information
Name
Comments
 
Verification Code
2 + 6 =