Sourashtra Time
NOW AVAILABLE IN READY STOCK. RUSH YOUR ORDER FOR hiinun caLisye, hitavun caLisye and cunuk caLisye for Rs. 250/- ONLY.
Advertisement
sabai....Shreyanagam

ஸ்ரேயங்க3ம்:


Vol.4 1st July 2017 Issue: 21


 

சபை நிர்வாகத்திற்கு

சக்தி அதிகமா?

மதுரை ஸெளராஷ்ட்ர சபைக்கு வருகின்ற 15ஆம் தேதி போர்ட் ஆப் டைரக்டர்ஸ் தேர்தல் நடைபெற உள்ளது. இதில் வாக்களிக்கத் தகுதி படைத்தவர்கள் தேர்ந்தெடுக்கப்பட்ட கௌன்சிலர்கள், மகிமை மற்றும் கட்டளை கௌன்சிலர்கள் மட்டுமே. இந்த தேர்தல் நடைபெறுவது மதுரையிலுள்ள ஸெளராஷ்ட்ர மக்களில் எத்தனை பேருக்குத் தெரியும் என்கிறீர்கள்? வாக்களிக்கவுள்ள கௌன்சிலர்களில் பலருக்கு தேர்தல் நடைபெற இருப்பது சில தினங்கள் முன்புவரை தெரியாது என்ற கசப்பான உண்மையை ஒப்புக்கொள்ளதான் வேண்டும். சமூக மக்களுக்கு சபையின் நோக்கம் பற்றித் தெரியாது. சபையின் பயன்பாடு பற்றியும் தெரியாது. ஒரு முறை சபைக்கு நிர்வாகப் பொறுப்பினை ஏற்றுக் கொண்டவர்கள் அடுத்த எவரையும் அண்டவிடுவதில்லை. அந்த நாற்காலிகளுக்கு அவ்வளவு பவர் உள்ளது. 

 

ஒவ்வொரு முறையும் ஒரு புதிய நிர்வாகம் சபைக்குச் செல்லவேண்டும். ஏதாவது உருப்படியான காரியம் செய்யவேண்டும் என்ற நினைப்பில் இருப்பவர்கள் தேர்தலில் வெற்றிப் பெறவில்லை என்றால் அடுத்த தேர்தல் வரும்வரை சபையை விட்டு விலகியே இருக்கும் போக்கை கைவிட வேண்டும். எதிர்ப்புகள் அருகிலிருக்கும்போதுதான் நிர்வாகத்திலிருப்பவர்கள் சமூகச் சிந்தனையோடு இருப்பார்கள். மக்களுக்கும் ஏதாவது நல்லது நடக்கும். இவர்களே பதவியில் இருக்கும்படி உறுப்பினர்களைச் சேர்த்துக் கொண்டார்கள். நாம் அங்கே வெற்றிப் பெற இயலவில்லை என்ற போக்கினை விடுத்து தங்களது செயல்பாடுகளை வெளியிலிருந்து முடுக்கிவிட்டுக் கொண்டிருந்தாலே போதும். ஆக்கப்பூர்வமான பணிகளை நிர்வாகத்தில் இருப்பவர்களும் செய்யத் தொடங்கி விடுவார்கள். நல்ல காரியங்களை நாமே செய்யவேண்டும் என்பதைக் காட்டிலும் அடுத்தவர்களைச் செய்ய வைப்பதும் சிறந்த பணிதான் என்பதை உணர்ந்து தேர்தலில் சந்திக்க இருக்கும் வெற்றித் தோல்விகளுக்கு அப்பால் சமூகத்திற்கு நாம் ஆற்றவேண்டியப் பணிகளைப் பற்றிய சிந்தனைகளை வளர்த்துக் கொள்வதுதான் எதிர்கால சந்ததியினரை நாம் நெறிப்படுத்த முடியும்.

 

மதுரையிலிருக்கும் அனைத்து ஸெளராஷ்ட்ரர்களும் மதுரை ஸெளராஷ்ட்ர சபைக்கு உறுப்பினர்கள் ஆவார்கள். தேர்தல் சமயத்தில் போட்டியிடவும் வாக்களிக்கவும் மட்டும் கட்டணம் செலுத்திய ஆயுட்கால உறுப்பினர்களுக்கு உரிமையுண்டு. இது சபையின் விதிகளில் ஒரு சரத்து. உறுப்பினர் கட்டணம் பத்து ரூபாயாக இருந்து தற்சமயம் ஆயிரங்களில் உள்ளது இருக்கின்ற நிர்வாகத்தினரின் சர்வாதிகாரப் போக்கிற்கு உதாரணம். ஏனென்றால் அவர்கள் இடத்தில் வேறு யாரும் வந்து விடக்கூடாது என்பதே காரணம். சபையிலிருந்து சமூக மக்களுக்கு பல நல்ல காரியங்கள் செய்ய விதியும் உள்ளது நிதியும் உள்ளது. பயன்படுத்திக்கொள்ள மக்களுக்குத் தெரியவில்லை என்பதா இல்லை பயன்படுத்த நிர்வாகத்திற்குத் தெரியவில்லை என்பதா? மாற்றம் தேவை என்று நாம் எழுதுவதால் மட்டும் மாற்றங்கள் நிகழ்ந்து விடப்போவதில்லை. அதனை ஏற்றுக் கொள்ளும் மனப்பக்குவம் இருதரப்பினர்க்கும் வரவேண்டும். 

 

பழையன கழிதலும் புதியன புகுதலும் வழிவழி வந்த மரபு என்று நாம் சிறுவயதில் படித்ததை நினைவில் கொண்டு பழைய நிர்வாகத்திற்கு விடைக்கொடுத்தனுப்பி புதிய நிர்வாகத்திற்கு வழிவிட்டு சில கோரிக்கைகளை முன்வைக்கலாம் என்று எண்ணுகிறேன். முதலில் பதவிக்கு வருபவர்கள் சபை சொத்துக்களை காப்பாற்ற வேண்டும் என்றுதான் எண்ணுகிறார்கள். அதற்கு முன்னர் அவர்கள் மொழியார்வம் இலக்கியங்களைப் படிக்க வேண்டும் என்றும் அதனை காக்கவேண்டும் என்ற முனைப்புடன் செயல்படும் பாங்கினைப் பெற்றிருக்க வேண்டும். சமூகச் சிந்தனை எப்போதும் இருக்கவேண்டும். நமது கலாச்சாரத்தை போற்றி கடைப்பிடிக்க வேண்டும். தேவையற்ற பழக்கவழக்கங்களை சமூகத்திலிருந்து விரட்டியடிக்கப்பட வேண்டும். கல்வி தொழில் முன்னேற்றம் குறித்தும் சமூக மக்களிடம் நேரிடையாக விவாதிக்கவேண்டும். சபைக்கு உறுப்பினர்களைச் சேர்க்க குறைந்தபட்சக் கட்டணம் நிர்ணயிக்க வேண்டும். சபையின் உறுப்பினர் என்பதை பெருமையுடன் சொல்லிக் கொள்ள வைக்கவேண்டும். 

 

இந்த கோரிக்கைகள் யார் தேர்ந்தெடுக்கப்பட்டாலும் செயல்படுத்தப் படவேண்டும் என்பதே பொதுமக்களின் விருப்பம். ஒரு நிர்வாகம் ஒரு முறைக்குமேல் செயல்படக்கூடாது. புதியவர்களுக்கு வாய்ப்புக் கொடுக்க வேண்டும் என்பதில் கவனமாக இருக்கவேண்டும். எனவே மாற்றத்தை கொண்டுவர முயற்சி செய்யுங்கள் வாக்காளர்களே!

 

User Comments
Information
Name
Comments
 
Verification Code
4 + 7 =