Sourashtra Time
NOW AVAILABLE IN READY STOCK. RUSH YOUR ORDER FOR hiinun caLisye, hitavun caLisye and cunuk caLisye for Rs. 250/- ONLY.
Advertisement
bhAsha sammAn 01-01

சாகித்ய அகாடமி 2016ஆம் ஆண்டிற்கான அனைத்து மொழிகளுக்கும் விருதினை அறிவித்துள்ளது. இந்நிலையில் மத்திய அரசால் அங்கீகரிக்கப்படாத மொழியான குருக், லடாக்கி, ஹல்பி, ஸெளராஷ்ட்ர ஆகிய மொழிகளுக்கும் பாஷா சம்மான் விருது அறிவித்துள்ளது. இதில் தமிழ்நாட்டைச் சேர்ந்த ஸெளராஷ்ட்ர மொழி இலக்கியத்திற்கும் வளர்ச்சிக்கும் பங்களிப்பு செய்ததாக தமிழகத்தைச் சேர்ந்த ஸெளராஷ்ட்ர இனத்தவர்களான பேராசிரியர் டி.ஆர்.தாமோதரன் மற்றும் திருமதி சரோஜா சுந்தரராஜன் ஆகியோர் இணைந்து பாஷா சம்மான் விருது பெற உள்ளனர். ரொக்கப்பரிசாக தலா ரூபாய் ஐம்பதாயிரமும் தாமிர பதக்கமும் வழங்கப்படுகிறது. இவ்விழா வருகின்ற பிப்ரவரி மாதம் 22ம் நாள் புதுடில்லியில் நடைபெற உள்ளது. 

 

பாஷா சம்மான் விருதுக்குத் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள பேராசியர் தாமோதரன் 1947 மார்ச் 22ல் பிறந்தவர். திருமதி சரோஜா சுந்தரராஜன் 1940 ஜனவரி 13ல் பிறந்தவர். இவர்கள் இருவருமே மதுரையைச் சேர்ந்த திருக்கொண்டா குடும்பத்தைச் சேர்ந்தவர்கள் என்பதும் குறிப்பிடத்தக்கது.

 

பேராசிரியர் தாமோதரன் சமஸ்கிருத மொழிப் பேராசிரியர் ஆவார். இவர் மதுரை பல்கலைக்கழகம், ஸெளராஷ்ட்ரக் கல்லூரி, ராமேஸ்வரம் தேவஸ்தானத்தால் நிர்வகிக்கப்பட்ட கலைக்கல்லூரி மற்றும் தஞ்சை சரஸ்வதி மகால் நூலகம் ஆகியவற்றில் சமஸ்கிருதத் துறைப் பேராசிரியராக பணியாற்றியுள்ளார். ஸெளராஷ்ட்ர மொழி இலக்கியம் எழுத்து இவற்றில் தணியாத ஆர்வம் கொண்டவர். சரஸ்வதி மகாலில் பணியாற்றிய சமயம் ஸெளராஷ்ட்ர மொழி இலக்கியம் பற்றி அரிய தகவல்களை சேகரித்தார். ஸெளராஷ்ட்ர மொழி இலக்கியங்கள் பழைய ஏடுகள் போன்று பல கிடைத்தற்கரிய பொக்கிஷங்களை சேகரித்து பாதுகாத்து வைத்துள்ளார். லண்டன் பல்கலைக்கழகத்தில் உள்ள நூலகத்தில் நம் ஸெளராஷ்ட்ர மொழி இலக்கியங்களைப்பற்றிய விபரங்களை மைக்ரோ பிலிம் மூலம் பாதுகாப்பு செய்யப்பட்டுள்ளது இவருடைய முயற்சியால் என்பதும் குறிப்பிடத்தக்கது.

 

குஜராத் மாநிலத்தில் உள்ள ராஜ்கோட்டில் செயல்படும் ஸெளராஷ்ட்ர பல்கலைக்கழகத்தில் ஸெளராஷ்ட்ர வரலாறு இலக்கியம் கலாச்சாரம் மொழி தொடர்புடைய ஆய்வுகளை மேற்கொள்ள ஸெளராஷ்ட்ர ஹெரிடேஜ் சேர் என்ற அமைப்பு உருவாக்கப்பட்டது. தேசீய அளவில் ஸெளராஷ்ட்ர சொல் வளர்ச்சிப் பயிலரங்கம் 2010 ஆகஸ்ட் 10 மற்றும் 11ஆம் தேதிகளில் Central Institute of Indian Languages and sourashtra college அளித்த நிதி உதவியுடன் நடைபெற்றது. இதில் ஸெளராஷ்ட்ர பல்கலைக்கழகப் பேராசிரியர்களின் வழிகாட்டுதலின்படி பேராசிரியர் தாமோதரன் உட்பட மதுரை பரமக்குடி திண்டுக்கல் தஞ்சை திருநெல்வேலி காஞ்சிபுரம் சென்னை ஆகிய ஊர்களிலிருந்து 42 ஸெளராஷ்ட்ர மொழி அறிஞர்கள் ஒன்று கூடி 25 தலைப்புகளில் சேகரிக்கப்பட்டது. அப்படி சேகரிக்கப்பட்ட சொற்களை நிரல்படுத்தி ஒலியன்முறை, தமிழ், ஸெளராஷ்ட்ரீ மற்றும் தேவநாகரி எழுத்துக்களில் உருவாக்கி  ஜீவஸப்33 கோஷம் என்ற தலைப்பில் பேராசிரியர் தாமோதரன் புத்தகமாக வெளியிட்டுள்ளார். ஸெளராஷ்ட்ர மொழி பேசுவோரும் பிற மொழியினரும் எளிதில் படித்து புரிந்துகொள்ளும் விதத்தில் வடிவமைக்கப்பட்ட இந்நூல் குஜராத்தி மொழியிலும் மொழிப்பெயர்ப்பு செய்யப்பட்டுள்ளதாக தாமோதரன் கூறுகிறார். இவருடைய மொழிப் பணிக்கும் இந்த நூலுக்கும் சாகித்ய அகாடமியின் பாஷா சம்மான் விருது வழங்கப்பட்டிருக்கிறது. இவருக்கு வழங்கப்பட்ட இந்த கௌரவம் நம் மொழிக்கு கிடைத்தப் பெருமை. இவரது பணி இன்னும் சிறப்பாக தொடரவேண்டும் என்று ஸெளராஷ்ட்ர டைம் மனதார வாழ்த்துகிறது.

நம் சமூகப் பத்திரிகைகள் மூலம் எழுத்துலகில் அறிமுகமாகி பல நூல்களை எழுதி வெளியிட்டுவரும் திருமதி சரோஜா சுந்தரராஜன் பாஷா சம்மான் விருதினை பகிர்ந்து கொள்ள தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளவர்  இவர் கோவையில் வசித்து வருகிறார். இவரது கணவர் சுந்தரராஜன் கோவையில் ஒரு நூற்பாலையில் பணிபுரிந்து வந்த நிலையில் இவரது குடும்பம் கோவையில் வசித்து வரத் தொடங்கியது. இவர் மதுரை காமராசர் பல்கலைக் கழகத்தில் தமிழ்ப்புலவர் படிப்பையும் இந்தி பிரச்சார சபையின் மூலமாக பிரவீண (RPP) படிப்பையும் தனது கல்வித்தகுதியாகக் கொண்டவர். 

1975ஆம் ஆண்டு முதல் இவர் ஸெளராஷ்ட்ர மொழியில் கவிதைகளை எழுதத் தொடங்கினார். ஸெளராஷ்ட்ர சமூகத்தில் விழிப்புணர்வு உணர்ச்சிப் பூர்வமாக செயல்படத் தொடங்கிய ஆண்டு. இந்த ஆண்டில்தான் மொதிரெத்து பாஷாபிமானி ஆகிய பத்திரிகைகள் தொடங்கப்பட்டது. இந்த இரண்டு பத்திரிகைகளிலும் தொடர்ந்து கவிதைகளை எழுதி வந்த சரோஜா சுந்தரராஜன் ஸெளராஷ்ட்ர டைம் வெளிவரத் தொடங்கியதும் அதிலும் தொடர்ந்து எழுதி வந்தார். இப்போது இ-பத்திரிகையிலும் எழுதி வருகிறார். இவரது கவிதை நூல்கள் பல வெளியாகியுள்ளன. அவற்றில் 2012ல் வெளியிடப்பட்ட யோகேந்த3ருந் மொந்நு ஸிங்கா3ரு லாடுந் என்ற நூலுக்கு இவ்வாண்டு சாகித்ய அகாடமியினரால் பாஷா சம்மான் விருது வழங்கப்பட உள்ளது. ஸெளராஷ்ட்ர டைம் இ-பத்திரிகையில் இந்தப் புத்தகத்தின் மதிப்புரை எழுதப்பட்டுள்ளது.

 

சேலம் மகான் புட்டா அழகார்யர் படைத்திட்ட பஞ்சல் சரித்ரு என்னும் காவியத்தை அனைவரும் படித்து புரிந்து கொள்ளும் விதத்தில் எளிமைப்படுத்தி தமிழில் விளக்கவுரையும் சரோஜா சுந்தரராஜன் எழுதியுள்ளார். அதனை தற்சமயம் புத்தகமாக வெளிடுவதில் ஸெளராஷ்ட்ர டைம் முனைப்புடன் செயல்பட்டுக் கொண்டிருக்கிறது என்பதையும் இத்தருணத்தில் தெரிவித்துக் கொள்கிறேன்.

 

சாகித்ய அகாடமியின் பாஷா சம்மான் விருது பெறும் பேராசியர் தாமோதரன் மற்றும் திருமதி சரோஜா சுந்தரராஜன் இருவரும் ஸெளராஷ்ட்ர மொழி இலக்கிய வளர்ச்சிக்கு நிறைய சேவைகள் செய்து நம் சமூகத்திற்கு பெருமை சேர்க்க வேண்டும் என்று ஸெளராஷ்ட்ர டைம் சார்பில் மனதார வாழ்த்துகிறோம்.                                   -ஆசிரியர்.

 

User Comments
Information
Name
Comments
 
Verification Code
4 + 8 =