Sourashtra Time
NOW AVAILABLE IN READY STOCK. RUSH YOUR ORDER FOR hiinun caLisye, hitavun caLisye and cunuk caLisye for Rs. 250/- ONLY.
Advertisement
Kanave kalaiyathe

கனவே கலையாதே !

சுவர்ணலதா குப்பா

 

காலையிலிருந்து காயத்ரிக்கு கையும் ஓடவில்லை காலும் ஓடவில்லை.நொடிக்கொரு தரம் மஞ்சள் பையை திறந்து மகன் சொன்ன மாதிரி பாஸ்போர்ட்டும் அவன் அனுப்பிய படிவங்களும், ரேஷன்கார்டு இத்யாதிகளும் பத்திரமாக இருக்கிறதா என்று பார்த்துக் கொண்டு படப்படப்பாக இருந்தாள். அதான் நூறு தடவை சரிப் பார்த்துட்டுத் தானே வந்திருக்கோம், கொஞ்சம் அமைதியா இரு என்று சொன்ன கணவனைப் பார்த்து உங்களுக்கென்ன இங்கிலீஷ்ல ஏதாவது கேட்டா என்ன பதில் சொல்றதுன்னு தெரியாம நானே பயந்து போயிருக்கேன் என்று சொன்னவளை பரிதாமாக பார்த்தார் விஸ்வநாதன்.

 

மகனைப் பார்க்க வேண்டும் என்ற ஆவலும் எப்படியாவது விசா கிடைத்துவிட வேண்டும் என்ற பதற்றமும் மனைவியின் முகத்தில் இருப்பதை கவனிக்கத் தவறவில்லை விஸ்வநாதன்.


பின்னே முதன்முதலில் அமெரிக்கா போக விசா வாங்குவதற்கு விண்ணப்பம் தெரிவித்து இன்று இன்டர்வியூ.  கிடைத்தவுடன் உடனே கிளம்பி வருமாறு படிக்கப் போய் வேலையில் செட்டிலாகிவிட்ட மகன் சொன்ன தினத்திலிருந்து அந்தநாள் என்று வருமோ என்று இருவரும் காத்திருந்தனர்.


சிறிது நேரத்தில் வீஸ்வனதான் என்றவுடன் இருவரும் குடுகுடுவெனபோக வெள்ளைக்காரர் ஒருவர் சிரித்தமுகத்துடன் கொஞ்சம் தமிழும் நிறைய ஆங்கிலமும் கலந்து கேள்விகள் கேட்க, விஸ்வநாதன் கடமையாக பதில் சொல்ல வேர் ஆர் a+  கோயிங்? என்று சிரித்துக்கொண்டே காயத்ரியிடம் கேட்க, வெட்கத்துடன் அஅமேரிக்கா என்று நாணத்துடன் சொல்ல, அங்கேயே செட்டில் ஆகி விடமாட்டீர்களே என்று சிரித்துக்கொண்டே எல்லா பேப்பர்களிலும் அப்ரூவ்டு என்று சீல் வைத்துவிட்டு, உங்கள் பாஸ்போர்ட் வீடு வந்துசேரும் என்று சொன்னவுடன் சாவித்திரிக்கு நிலை கொள்ளவில்லை.


ஊருக்குப் போனவுடன் மீனாக்ஷிக்கு அர்ச்சனை செய்யவேண்டும். ஒரு பிரச்னை இல்லாமல் விசா கிடைத்துவிட்டது                                                                                                                      என்று சொன்ன காயத்ரியைப்  பார்த்து சிரித்துக்கொண்டே வா போகலாம் என்று விஸ்வநாதனும் சாப்பிட்டு விட்டு ரயில்நிலையத்துக்குப் போகலாம் என்று சொல்லி அமெரிக்க தூதரகத்தை விட்டு வெளியே வந்தார்கள்.


சாப்பிட்டுக் கொண்டிருக்கையில் ஆனந்தும் கைபேசியில் அழைக்க  ஆமாம்ப்பா  ஒண்ணுமே கேக்கலே. எங்கே உங்க அம்மா எதையாவது இங்கிலீஷ்ல சொல்லி விடுவாளோன்னு பயந்துகிட்டிருந்தேன். மீனாக்ஷி அருளால விசாவும் கெடைச்சிருச்சு. டிக்கெட் எப்ப அனுப்புற என்றவுடன் ஆனந்தும்  நான் ஏற்கெனவே புக் பண்ணியிருந்த டிக்கெட்ஐ உறுதி செய்துவிடுகிறேன் அப்பா. நீங்களும் அம்மாவும் ஒரு முழு மெடிக்கல் செக்-அப் செய்து கொண்டு இன்சூரன்ஸ் எடுத்து விடுங்கள் மற்ற விவரங்களை ஊர் போய் சேர்ந்தவுடன் நான் பேசுகிறேன். அம்மா, பார்த்து பாத்திரமாக போங்கள் என்று அம்மாவிடமும் பேசிவிட்டு போனை வைத்துவிட்டான்.


ரயிலில் ஏறியதிலிருந்து காயத்ரிக்கு நிலைகொள்ளவில்லை. மனமெல்லாம் ஒரே சந்தோஷம்.  மகனைப் பார்க்கப்  போகிறோம். முதல்முறையாக மதுரையைத் தாண்டி விமானத்தில் ஏறி நினைக்கவே பரவசமாக இருந்தது. ஊருக்குப் போனவுடன் முதல் வேலையாக அவனுக்குப் பிடித்தவைகளைத்  தன் கையாலே சமைத்து எடுத்துக் கொண்டுபோகவேண்டும் என்று மனம் பரபரத்தது. அப்படியே அந்த அசதியில் தூங்கியும் விட்டாள். காலையில் மதுரை நெருங்கும் வேளையில் விஸ்வநாதன் எழுப்பிய பிறகுதான் முழிப்பே வந்தது. முகம் கழுவிவிட்டு வீட்டுக்குப் போகத் தயாரானாள்.


வீட்டிற்கு வந்தவுடன் சுற்றங்களுக்கு விசா கிடைத்த செய்தி சொல்லி இன்னும் ஒருவாரத்தில் அமெரிக்கா போவதாகவும் வீட்டு வேலைகள் நிறைய இருப்பதாகவும் சொல்லிக்கொண்டு சிலரின் வயிற்றெரிச்சலையும் வாங்கிக்கொண்டு வேலைகளை ஆரம்பித்தாள்


ஆனந்துக்கு பிடித்த அதிரசம்,முறுக்கு, பிளம்கேக், முந்திரிகேக் என்று லிஸ்ட் நீண்டுகொண்டே போனது. நாள் நெருங்கநெருங்க சுற்றமும் வந்து அவர்களும் ஆனந்துக்கு கொடு என்று பார்சல்களை கொடுக்க விஸ்வநாதனுக்கு பெட்டியில் வைத்து மாள முடியவில்லை. ஒருகட்டத்தில் இதற்குமேல் பெட்டியில் இடம் இல்லை. மேலும்மேலும் சேர்க்காதே என்று கண்டிப்புடன் சொல்லிவிட்டு எடை சரிபார்த்து எல்லாம் திருப்தியாக இருந்தது அவருக்கு. நடுநடுவே ஆனந்தும் விமானத்தில் வாந்தி வந்தால் அம்மாவிற்கு மருந்தை கொடுக்கவும். எதற்கும் இட்லியை சாப்பிட எடுத்துக் கொள்ளுங்கள் என்று சொல்லும்போதெல்லாம் காயத்ரிக்கு தன்புத்திர சிகாமணியை நினைத்துப் பெருமையாக இருக்கும்.  என்ன தவம் செய்தனை என்று சிலாகித்துக் கொண்டாள்.  தன்மேல்தான் ஆனந்துக்கு எத்தனை அன்பு. விரைவில் ஒருநல்ல பெண்ணைப் பார்த்து திருமணம் செய்து அவன் குழந்தை குட்டிகளுடன் வாழ்வதைப் பார்க்கவேண்டும் என்று அந்த பேதை மனம் பலகணக்குகளைப் போட்டது.


ஒரு வழியாக சுற்றம் வழியனுப்ப, மதுரையிலிருந்தே விமானத்தில் சென்னை சென்று அங்கிருந்து கலிபோர்னியா செல்வதாக திட்டம்.


விமான நிலையமே ஒரு சொர்க்கபுரிபோல் இருந்தது. சில்லென்றிருந்த அந்த இடம் ஏதோ ஒரு கனவுலகத்தில் இருப்பதுபோலவே இருந்தது. நாம் மிகவும் அதிர்ஷ்டம் செய்தவர்கள் இல்லையா? நம் ஒரே மகன் நன்கு படித்து எந்தவித கெட்டப்பழக்கங்களும் இல்லாமல் ஊரார்மெச்ச நடந்து நம்மை கௌரவித்து இன்று அவனோடு சேர்ந்து அமெரிக்காவையும் பார்க்க அழைத்திருக்கிறானே நாம் மிகவும் கொடுத்து வைத்தவர்கள்தானே என்று கண்களில் கண்ணீர்மல்க பெருமையுடன் கேட்கும் காயத்ரியைப்பார்த்து அமைதியாக சிரித்தார் விஸ்வநாதன்.


மகன் பெருமை தாளவில்லை உனக்கு என்று அவரும் அவளுடைய பெருமையில் பங்குகொண்டார்.  நிஜம்தானே… …. சில குழந்தைகள் ஒரு நிலை வந்தவுடன் தலைகால் புரியாமல் ஆடும். இந்த உலகில் தினமும் ஒருமுறையேனும் போன் செய்து நலம் விசாரிப்பதிலும் இருக்கும் வீட்டை இடித்து வசதியாக கட்டிக் கொடுத்ததிலும் இனி நீங்கள் வேலைக்குப் போகவேண்டாம் ஏதாவது ஒரு இல்லத்திற்கு சென்று உங்களால் முடிந்த அளவு உதவி செய்யுங்கள் என்று சொல்லி ஊராரின் பொறாமையையும் வாங்கிக்கொண்ட மகனை நினைக்க நினைக்கப் பெருமையாக இருந்தது விஸ்வநாதனுக்கும்.



சிறிது நேரத்தில் ஆனந்த் ஆனந்த் என்று யாரோ அழைப்பது போல் கேட்டவுடன், கையில் வைத்திருந்த ஐந்தாயிரம் ரூபாய் வங்கி காசோலையைப் பார்க்க காயத்ரிக்கு ஒன்றும் புரியவில்லை.



எங்கே இருக்கிறோம் என்று சிலவினாடிகள்……….பின்னர் ஆனந்தும் சேர்ந்து அம்மா என்னைக் கூப்பிடுகிறார்கள். நான் போய் நேர்முகத்தேர்வு முடித்துவிட்டு வருகிறேன் என்று அண்ணா பல்கலைகழகத்தில் ஒரு அலுவலகத்தில் நுழைய  அடராமா………. இதுவரை நான் கண்டது வெறும் கனவா! இன்னும் ஆனந்த் பொறியியல் கல்லூரிக்குப் போகவில்லையா என்று பெருமூச்சு விட்டவுடன், அவளை நன்கறிந்த விஸ்வநாதனும் அவள் கையைப் பற்றிக்கொண்டு உன் கனவு நிறைவேறும் என்று சொல்ல, சிரித்துக் கொண்டே வந்த மகனுடன் மூவரும் ஊரைப்பார்த்துக் கிளம்பினார்கள்.

 

கனவு கலையக் கூடாது என்ற கனத்த இதயத்துடன் காயத்ரி தன் கணவனுடன் கிளம்பினாள்.

User Comments
Sudarsan Vaithu
Kanave Kalaiyadhey - story was going very quiet, then all of sudden at the end takes a turn... well written!!!
Snehalatha Jegadeesan
Story is nice going very interesting..
Kannan
Doesn't seems like its your first story, please keep writing!!
Latha Kuppa
Thank you Sudarsan dha, Snehalatha & Kannan for your nice comments.
Information
Name
Comments
 
Verification Code
1 + 5 =