Sourashtra Time
NOW AVAILABLE IN READY STOCK. RUSH YOUR ORDER FOR hiinun caLisye, hitavun caLisye and cunuk caLisye for Rs. 250/- ONLY.
Advertisement
gouravamaana....Shreyangam

ஸ்ரேயங்க3ம்:


 

Vol.4 16th December  2016 Issue: 8


 

கௌரவமான செயல்!

தமிழ்நாட்டில் அம்மா என்றழைக்கப்பட்டு அனைவர் மனதில் இடம்பெற்ற ஒப்பற்ற தலைவராக இருந்து கட்சியையும் தமிழகத்தையும் வழிநடத்திய ஜெயலலிதா காலமானது ஈடுசெய்ய இயலாத இழப்பு. அவருடைய இடத்தை நிரப்ப யாராலும் இயலாது என்பது உண்மை. ஆனால் சில அரசியல் விஷமிகள் தங்கள் பதவியை தக்கவைத்துக் கொள்ள சசிகலாவை முதன்மைப் படுத்திப் பேசி வருவது ஒரு நெருடலை ஏற்படுத்தி வருகிறது. புரட்சித்தலைவர் எம்ஜிஆர் தனக்குப் பின் கட்சியை வழிநடத்திச் செல்லும் தகுதி உடைய நபராக யாரையும் முன்னிறுத்தவில்லை. ஆனால் ஜெயலலிதா தனது புத்திசாலித்தனமான செயல்பட்டால் கட்சியையும் தமிழகத்தையும் நல்லமுறையில் வழிநடத்தி துணிச்சலான பெண்மணி என்றும் நாட்டின் சிறந்த தலைவர் என்றும் பெயர் எடுத்தார். ஆனால் அவரும் அவருக்குப் பின் கட்சியை வழிநடத்த தகுதியானவர் இவர்தான் என்று யாரையும் முன்மொழியவில்லை. ஆனால் அவரது நம்பிக்கைக்குப் பாத்திரமான பன்னீர்செல்வம் தகுதியானவர் என்று தற்காலிக முதல்வராக உடனடியாக தேர்வு செய்யப்பட்டுள்ளார்.

 

உடனிருந்த தோழி சசிகலாதான் அடுத்த வாரிசு. அவர்தான் பொதுச்செயலாளராகி முதல்வர் அரியணையில் அமரவேண்டும் என்று கட்சியின் மூத்த நிர்வாகிகள் செயற்குழு உறுப்பினர்கள் மற்றும் ஜாதி சங்கத்தினர் என்று ஒவ்வொருவராக வந்து கோரிக்கை விடுத்து வருகின்றனர். அம்மாவிற்குப்பின் கட்சிக்கு சின்னம்மாதான் என்றும் கூறிவருவது தமிழக மக்களுக்கு மிகுந்த வேதனையை அளிக்கிறது. அதிமுகவிற்கு ஜெயலலிதாவை பார்த்து வாக்களித்த மக்களுக்கு தாங்க முடியாத வேதனையாக இருக்கிறது. பொதுக்குழுக் கூடினால் எல்லா பிரச்னைகளுக்கும் முடிவு கிடைத்துவிடும் என்ற நிலையில் ஒரு மூத்த அமைச்சர் எம்ஜிஆர் உருவாக்கிய கட்சியில் அவர் படைத்த விதிமுறைகளையும் திருத்தம் செய்யலாம் என்றும் சசிகலாவே பொதுச்செயலாளராக வரவேண்டும் என்றும் கூறிவருகிறார். இவையெல்லாம் வாக்களித்த மக்களுக்கு உடன்பாடு உள்ளதா என்று அறிந்து செயல்பட வேண்டும் என்ற அடிப்படையை புரிந்துகொள்ளாதது வருத்தம் தரக்கூடியதாக இருக்கிறது. 

 

மக்களால் நான் மக்களுக்காக நான் என்ற அம்மாவின் லட்சிய வார்த்தைகளை தார்மீக மந்திரமாகக் கொண்டு செயல்படும் உத்தமமான ஒருவர்தான் இனி தமிழக முதல்வராக இருக்க முடியும். தமிழகத்தில் மட்டும்தான் ஒரு கிளமரான முகம் தேவை என்ற பண்பாடு வளர்ந்துள்ளது. மற்ற மாநிலங்களில் அப்படி ஒரு பண்பாடு இல்லையே. மக்களுக்காக சேவை செய்ய முன்வரும் ஒருவரை மக்களே இனம்கண்டு தேர்ந்தெடுத்து விடுகின்றனர். இந்த உண்மை தேர்தலால் வெளிப்படுகிறது. இதுதான் ஜனநாயகக் கடமை.

 

நல்ல நட்புடன் அருகிலிருந்து உறுதுணையாக செயல்பட்ட தோழியே போய்விட்ட பிறகு எனக்கு எதற்கு கட்சி பதவி என்று சொல்லிவிட்டு வீட்டுப்பக்கம் சென்றுவிட்டால் மக்கள் மனதில் ஒருபடி கௌரவம் அதிகமாகியிருக்கும். அதைவிடுத்து பணத்தை வைத்து ஆட்களை சேர்த்து கட்சியையும் ஆட்சியையும் பிடித்தே ஆகவேண்டும் என்று நினைப்பது தவறு என்பதை வரும் பொதுக்குழுவில் உறுப்பினர்கள் நிரூபணம் செய்வார்கள். அப்படி ஒரு அவமானத்தை சந்திப்பதை விட ஒதுங்கிக்கொள்வதே கௌரவமான செயல். 

 

User Comments
Information
Name
Comments
 
Verification Code
3 + 6 =